விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியால் மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய விமானப்படையின் 92வது நிறைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான முறையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டுகளித்த நிலையில், அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வான் சாகச நிகழ்ச்சியால் மெரினா கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால் நிறைந்து காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மெரினா கடற்கரை முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் காணப்படுவதாக கூறியுள்ளனர். மேலும், வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து 12 மணி நேரம் கடந்த நிலையில், இதுவரை குப்பைகளை அகற்ற மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தன்னார்வலர்கள் மட்டுமே குப்பைகளை அகற்றி வருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.