சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கும் மூச்சுத் திணறல், நீர்சத்து குறைபாடு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக ஒன்றன் பின் ஒருவராக பலர் மயங்கி விழ, மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரது நண்பர் சகுரூல்லா உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.