சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த 5 பேர் கூட்ட நெரிசலாலும், வெயிலின் தாக்கத்தாலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தவறு எங்கே நடந்தது? அரசின் முறையற்ற திட்டமிடல்தான் உயிரிழப்புகளுக்கு காரணமா? விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்….
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 10 நாட்களாகவே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக சென்னை மாநகரம் தயாராகி வந்த நிலையில், அக்டோபர் 1, 2 மற்றும் 4-ம் தேதிகளில் வான் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய வான் சாகச நிகழ்ச்சியைக் காண தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மின்சார ரயில் நிலையங்களில் ஈசல் கூட்டமாய் மக்கள் குவிந்ததால் திக்குமுக்காடிப் போயினர் மெட்ரோ மற்றும் ரயில்வே துறையினர்.
சுதாரித்துக்கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கிய மெட்ரோ ரயிலை, மூன்றரை நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கத் தொடங்கியது. ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகமோ மக்கள் வருகை குறித்து சிறிதும் கவலையேயின்றி, மின்சார ரயில்களை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கியது. இதுவே சென்னை மின்சார ரயில் நிலையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட பல லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் குவிந்ததால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பொதுமக்கள் பலரும் எண்ணற்ற சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. கூட்ட நெரிசலில் மூச்சு திணறியும், வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர்.
வெயில் உச்சத்தைத் தொட்டபோது அதன் கோர தாண்டவத்தை தாக்குபிடிக்க முடியாமல், கையில் பணமிருந்தும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அங்குமிங்குமாய் திண்டாடி அலைந்தனர் பொதுமக்கள்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து ஏராளமானோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபி-க்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை, மக்களுக்கு வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவிட்டதோ என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கியுள்ளது.
வான் சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், முறையான திட்டமிடலை மேற்கொள்ளாமல் தமிழக அரசு மக்களின் பாதுகாப்பில் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது என குமுறுகின்றனர் பொதுமக்கள்.
மெரினா கடற்கரையை சுற்றிலும் காவல்துறையினரை குவித்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாக எண்ணி கைகட்டி வேடிக்கை பார்த்த அரசு, கடற்கரைக்கு வந்த பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பையோ, முன்னெச்சரிக்கைகளையோ வழங்க தவறிவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வான் சாகச நிகழ்ச்சியை சாதனை நிகழ்ச்சியாக மாற்ற குவிந்த மக்கள் கடைசியில், இந்த கூட்டத்தை விட்டு வெளியேறினாலே அது நமது வாழ்நாள் சாதனைதான் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர். நிகழ்ச்சி முடிந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் வீடு திரும்ப எண்ணியதால், நாலாப்புறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை மாநகரமே ஸ்தம்பித்துப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். வெறும் 500 மீட்டர் தூரத்தை 2 மணி நேரமாக ஊர்ந்து கடந்தன வாகனங்கள்.
15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்து லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பிடித்த வான் சாகச நிகழ்ச்சிக்கு, எப்போதும்போல் “வழக்கமான கூட்டம்தான் வந்தது” என போகிறபோக்கில் ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தது சென்னை காவல்துறை.
அதற்கு ஒருபடி மேலே சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, வான் சாகச நிகழ்ச்சிக்கு விமானப்படை கூறியதைவிட அதிக பாதுகாப்பை தமிழக அரசு வழங்கியிருந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மக்களின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளார்.
அரசு தரப்பு என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் பார்முலா 4 கார் பந்தையத்திற்கு வழங்கிய பாதுகாப்பில் காட்டிய மும்முரத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு காட்ட அரசு நிர்வாகங்கள் தவறிவிட்டதாக பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கடைசிவரை விடையறியா கேள்வி ஒன்றுதான்… பறிபோன உயிர்களுக்கு பதில் சொல்வது யார்?