நாடு முழுவதம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
துர்கை அம்மன் மஹிஷாசுரனை வதம் செய்யும் நாள் ஆயுத பூஜை தினமாக கொண்டாடப்படுகிறது.9 நாட்கள் நடைபெறும் சண்டை, மஹிஷாசுரன் வதத்துடன் முடிவடைவதால் 10வது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில்ஆயுத பூஜை நாளான இன்று, வாகனங்கள், எந்திரங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து வழிபாடு நடத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் ஆயுத பூஜைக்கான பொருட்களை நேற்றைய தினமே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். பொரி, வாழைக் கன்று, பூசணி, பழங்கள், பூக்கள் என சந்தைகளில் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் போன்றே வடமாநிலங்களிலும் தசரா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஆயுத பூஜை பந்தல்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.
பௌத்த மத கோயில் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பந்தல் என அனைத்தையும் மக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டு புகைப்பட எடுத்து மகிழ்கின்றனர்.