இந்திய விண்வெளி நிலைய முதல் தொகுதியை 2028-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி நிலையத்தில் ஆய்வு மையம், அறிவியல் ஆய்வகம் என 5 தொகுதி வடிவமைப்பு நிறுவப்படவுள்ளதாகவும், இதில் ஒரு தொகுதி தவிர மீதமுள்ள 4 தொகுதிகளிலும் தனிப்பட்ட சோலார் பேனல்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
52 டன் எடை கொண்ட முதல் தொகுதியை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் 2028-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதி பணியாளர் குடியிருப்புகள் போன்ற அத்தியாவசிய தொழில்நுட்பங்களுக்கான சோதனை அமைப்பாக செயல்படும் என்றும், பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் விண்வெளி மையம் பராமரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய அந்தரிக்சா என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி நிலையத்தில் 3 முதல் 5 வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய முடியும் என்றும், புவி மற்றும் இயற்கை சார்ந்த சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.