வடலூர் வள்ளலார் கோவிலின் பின்புறம் எந்த கட்டுமானப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் கோயிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில், கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலங்களை வகை மாற்றம் செய்து அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள்படி பெறப்பட்டுள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறநிலையத் துறை தரப்பிலும், வள்ளலார் கோயில் நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக, வள்ளலார் கோயிலின் பின்புறம் கட்டுமானம் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, 4 நாட்களுக்கு முன்பு வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேசமயம், கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகை மாற்றம் செய்ய நகரமைப்பு இயக்குனர் ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.