கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது, புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம், அதிபர் பதவிக்கு போட்டியிடும் போது,‘இந்தியா அவுட்’ பிரச்சாரத்தை முகமது முய்சு முன்வைத்தே தேர்தலைச் சந்தித்தார். கடந்த டிசம்பரில், மனிதாபிமான காரணங்களுக்காக மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியப் படைகளை திருப்பி அனுப்ப வைத்தார்.
கடந்த ஜனவரியில், இந்தியாவின் தெற்குத் தீவுகளான லட்சத்தீவுகளுக்குப் பிரதமர் மோடி சென்ற நிலையில், முகமது முய்சுவின் அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தனர்.
இதற்குப் பதிலடியாக, மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக, மாலத்தீவின் சுற்றுலாத்துறை 150 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது.
கடந்த பிப்ரவரி மாதம், மாலத்தீவில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிட அதிபர் முகமது முய்சு அரசு அனுமதி வழங்கியது. இப்படி, இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்த முகமது முய்சு மீண்டும் மாலத்தீவின் அதிபராக வெற்றிபெற்றார்.
மாலத்தீவில் அதிபராகும் தலைவர்கள், அதிபரானதும் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும் பாரம்பரியத்தை அதிபர் முகமது முய்சு மீறினார். கூடுதலாக, மாலத் தீவின் அதிபரானதும் துருக்கிக்கும் சீனாவுக்கும் முகமது முய்சு பயணம் மேற்கொண்டார்.
இந்தச் சூழலில்,மாலத் தீவு, வெறும் ஒன்றரை மாதத்துக்கு மட்டுமே போதுமான அளவில் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருக்கிறது. 440 மில்லியன் அமெரிக்க டாலராக அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது மாலத்தீவு.
இந்தியாவின் பொருளாதாரத்தின் சக்தியையும், இந்திய நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட்டதன் விளைவுகளை மாலத்தீவு நன்கு உணர்ந்து விட்டது. அதனால் தான், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், இந்தியாவுடனான ஒத்துழைப்பு தேவை என்பதால், அதிபர் முகமது முய்சு இந்தியா வந்திருக்கிறார்.
பிரதமர் மோடியுடன் கரன்சி பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்தியா வழங்கியிருக்கும் நிதி உதவி, மாலத்தீவின் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே ஒப்பந்தமும், மாலத் தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயற்சி அளிக்க, இந்திய நீதித்துறை சேவைகள் ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தமும்,இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தமும், நாணய மாற்று ஒப்பந்தமும்,இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளன.
மாலத்தீவின் கடலோரக் காவல் படை கப்பல் ஹூரவீயை இலவசமாக சீரமைக்க இந்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.
மாலத்தீவு மக்களுடன் உறுதியுடனும் இருப்பதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவின் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாஹித், இருநாடுகளுக்கும் இடையேயான பழமையான உறவுகள் புத்துயிர் பெறுவதை கண்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்பதால், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக உறவை ஏற்படுத்திக் கொள்வதே நல்லது என்பதை பிற அண்டை நாடுகளும் முடிவுக்கு உணர வேண்டிய தருணமாக, மாலத்தீவு அதிபரின் இந்திய பயணம் அமைந்திருப்பதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.