மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பிரதமர் மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார்.
புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கான முதல் மாத ஊதியம், ஒருகோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் நூறு நாட்களில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளால் அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சியை வழங்கும் விதமாக மத்திய அரசால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் தான் பி.எம். இண்டர்ன்ஷிப் திட்டம். நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களை தேர்வு செய்து மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கும் இத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பி.எம். இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக ஒதுக்கிய மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது, குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாயை தாண்டக் கூடாது உள்ளிட்ட சில விவரங்களும் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியுடையவர்கள் https://pminternship.mca.gov.in/login/ பி.எம். இடர்ன்ஷிப் எனும் இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடுத்த மாதம் 27 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் இளைஞர்களின் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதோடு. டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாயுடன் கூடிய 12 மாத வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு இளைஞரும் ஆண்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாத பயிற்சியின் போது சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுவதால் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறக்கூடிய சூழல் உருவாகும். பிரதமர் மோடியின் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கோடி நிதியும் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசு, இந்த பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.