பிரசித்திப்பெற்ற குலசை தசராவின் 10-ம் நாள் விழாவான இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள உள்ளதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மைசூர் தசராவுக்கு அடுத்து இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது குலசேகரப்படினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழா. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குலசை தசராவின் சிகர நிகழ்ச்சியாக 10வது நாளான இன்று மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோயில்ல் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். அங்கு மகிஷாசுர வதம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனைதொடர்ந்து நாளை பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். வரும் 14-ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம் பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவு பெறவுள்ளது.