உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் துடிக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவை, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் புரட்டி போட்டிருக்கிறது மில்டன் புயல்.. அதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…
அமெரிக்காவின் 27-வது மாகாணமான ஃப்ளோரிடா, அந்நாட்டின் தெற்கில் உள்ள மாகாணத்திலேயே, அதிக மக்கள் தொகையை கொண்ட மாகாணமாகும். இங்கு மணிக்கு 120 மைல் வேகத்தில் புயல் தாக்கக் கூடும் என அமெரிக்க தேசிய சூறாவளி ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மில்டன் என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு ஃப்ளோரிடா மாகாணத்தை துவம்சம் செய்யத் தொடங்கியது.
இந்த புயலினால் ஏற்பட்ட நிலச்சரிவு, பெரு வெள்ளம், 193 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று ஆகியவற்றால் பல நூறு வீடுகள் தரைமட்டமாகின. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். ஒரு வழியாக சீஸ்டா கீ பகுதியருகே கரையை கடந்த மில்டன் புயல், தன் வழியில் குறுக்கிட்ட அனைத்தையும் சுவடே இல்லாமல் அழித்துச் சென்றிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால் பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த புயல் இதுதான் எனக் கூறப்படும் நிலையில், மக்கள் பதற்றமைடய வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். புளோரிடா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவுவதற்காக ஆயிரக்கணக்கான பெடரல் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க 20 மில்லியன் உணவு பொட்டலங்களும், 40 மில்லியன் லிட்டர் குடிநீரும் விநியோகிப்பட்டு வருகின்றன . புளோரிடா மாகாண மக்களுக்கு உதவ இதுவரை 5 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நிதியுதவியும், பொருளுதவியும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் புளோரிடா மாகாணத்தை சின்னாபின்னமாக்கிய மில்டன் புயலுக்கு தற்போது வரை 16-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களையும், உடைமைகளையும் இழந்த புளோரிடா மாகாண மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வரலாறு காணாத புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளும் ஆறுதலும், உதவிக்கரமும் நீட்டுகின்றன. அந்த வகையில் வியன்டியனில் நடைபெற்ற 21-வது ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம், மில்டன் புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவித்தார். இதன் மூலம் நட்பு நாடுகளின் துயர் துடைக்க இந்தியா எப்போதும் முன்னிற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி புயலால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது புயல் வருவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.