தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.
அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்மநபர்கள், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடலில் குண்டுகள் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ரவுடி லாரன்ஸ் பிஸ்னோயின் கூட்டாளிகள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் அங்கிருந்தபடியே கொலை திட்டத்தை நிறைவேற்றியது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.