சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நேற்றிரவு முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு அருகே சாலையோரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனுடன் கழிவுநீரும் கலந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.