புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திலேயே 43 மில்லி மீட்டர் மழை பெய்ததால்தான் பாதிப்பு ஏற்பட்டது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால்
நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியார் நகர், பால் பண்ணை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திலேயே 43 மில்லி மீட்டர் மழை பெய்ததால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.