இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலையில் இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி ட்ரூடோ குற்றம் சாட்டி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய தூதர்களின் பங்கை நிரூபிக்க தன்னிடம் வலுவான ஆதாரம் இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.