மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஹில்கிரோ-ஆடர்லி ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் மழையும் குறைந்ததால் 2 நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட மலை ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்தனர்.