தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பல ரகங்களில் இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், அந்த இனிப்புகளால் ஏற்படும் அஜீரண கோளாறுகளை தவிர்க்கும் தீபாவளி லேகியத்தை திருச்சியில் தயாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின் அங்கமாக மாறியிருக்கும் இனிப்புகளை அதிகளவில் உண்போருக்கு அஜிரணக் கோளாறுகளும், பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகையினால் ஒரு சிலருக்கு சுவாசப் பிரச்னைகளும் வருவது வழக்கமாக இருக்கிறது. அதனை தவிர்க்கும் வகையில் தனியா, அரிசி, திப்பிலி, சுக்கு, சீரகம், மிளகு, வெல்லம், ஓமல் என பல்வேறு நாட்டு மருத்துவ குணம் கொண்டவற்றை கொண்டு தீபாவளி மருந்து எனப்படும் தீபாவளி லேகியம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிகாலை உடலில் எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் தீபாவளி லேகிய உருண்டையை உண்டால், இனிப்புகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்கின்றனர் தீபாவளி லேகிய தயாரிப்பாளர்கள்.
தீபாவளி பண்டிகை மட்டுமல்லாது இதர நாட்களிலும் தீபாவளி லேகியத்தை உண்ணலாம் எனவும், குறிப்பாக பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்பால் அதிகளவில் சுரக்கவும், அவர்கள் உண்ணும் உணவு எளிதில் செரிக்கவும் இந்த தீபாவளி லேகியம் உதவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து இந்த தீபாவளி லேகியம் என்கின்றனர் விற்பனையாளர்கள்
தீபாவளி பண்டிகையை பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் உண்டும் உற்சாக கொண்டாடும் வேளையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தீபாவளி லேகியமும் உண்ண வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.