தீபாவளி வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கங்கா ஸ்நானம் செய்து, விளக்கேற்றி இறைவனை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, விதவிதமான இனிப்பு பட்சணங்கள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு, மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாடும், தீபாவளி பண்டிகையின் வரலாறு என்ன? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளியை நரக சதுர்தசி என்றும் அழைப்பார்கள். ஆண்டு தோறும், ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கும் வேளையில், பௌர்ணமிக்கு பின் வரும் 14 வது நாளில், தேய் பிறையில் தீபாவளி கொண்டாடப் படுகிறது.
வடமொழியில்,வேத வியாசர் அருளிய ஸ்கந்தத்தில், தீபாவளி தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஆதி பராசக்தியான பார்வதி தேவி, தொடர்ந்து 21 நாட்கள் கேதார கௌரி விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை வழிபட்டார். பார்வதியின் தவத்துக்குப் பயனாக, தனது இடப் பாகத்தை அம்மைக்கு அளித்தார் சிவபெருமான். பரம்பொருளான சிவபெருமான், தொன்மை கோலமான அர்த்தநாரீஸ்வரர் திருவடிவம் கொண்ட நாளே தீபாவளியாகும்.
சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதம் கடைபிடிக்கப்படும் நாளே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றால் தீப ஒளி திருநாள் என்பார்கள். ஆவளி என்றால், வரிசையாக அடுக்கப்பட்டது என்பது பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து, அந்த தீபங்களின் ஒளியில் சிவபெருமானை வழிபட வேண்டிய நாள் தான் இந்த தீபாவளி என்று சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர். வனவாசம் முடிந்து, மகாபாரத போர் முடிவில் வெற்றி பெற்று, திரும்பிய பாண்டவர்களை அனைத்து மக்களும் வரவேற்று மகிழ்ந்தனர். பாண்டவர்களை வரவேற்கும் விதமாக பாரத மக்கள் நாடெங்கும் தீபம் ஏற்றி கொண்டாடிய நாளே தீபாவளியாகும்.
14 ஆண்டு கால வன வாசத்துக்குப் பின், இராவணனை வதம் செய்து, சீதா பிராட்டியுடன், ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, ஒரு அமாவாசை நாளில் அயோத்தி திரும்பினார். அயோத்தி மக்கள், தெருவெங்கும் தீப விளக்குகள் ஏற்றி, ஸ்ரீ சீதாராமனை வரவேற்று அந்த நாளையே பெரும் திருவிழாவாக வரிசை வரிசையாக தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாடினர்.
தீபாவளி அன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவதும் இந்தியாவின் வடமாநிலங்களில் பழக்கமாக இருக்கிறது. செல்வ வளம் வாழ்வில் பெருக, தீபாவளி நன்னாளில், லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை ஒன்றாக வைத்து வழிபாடு செய்கின்றனர்.
வடநாட்டில் தீபாவளி கொண்டாட காரணம் இவ்வாறு இருக்க, தமிழகத்தில் தீபாவளியை கொண்டாட காரணம் நரகாசுரன் வதமாகும்.
பூமாதேவிக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கும் பிறந்த பகுமன் என்ற நரக அசுரன் ஆன நரகாசுரன், தேவர்களுக்கும்,ரிஷிகளுக்கும்,கொடுமைகள் செய்து வந்தான். ஏற்கெனவே, பிரம்மாவிடம் தன் தாயின் கையால் மட்டுமே தனக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வாங்கி இருந்தான்.
இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனுடன் போரிடும் போது , நரகாசுரன் எய்த அம்பினால் மயக்கம் அடைவது போல் கீழே விழுகிறார். இதைப் பார்த்த பூமாதேவி, சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனை வதம் செய்கிறாள்.
தனக்கு மரணம் வழங்கிய தாய் பூமாதேவியிடம், தனது கொடுமைகளில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் தனது மரணநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற வரத்தை கேட்டு பெறுகிறான் நரகாசுரன்.
நரகாசுரன் இறந்த நாளை கொண்டாட மக்கள் பயப்படலாம் என்று எண்ணிய பூமாதேவி, அன்றைக்கு காலையில் தேய்த்துக் கொள்கிற எண்ணெயில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வசிக்கும் படி அருளினாள்.
இதனாலேயே, தீபாவளி அன்று , அதிகாலையில், எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து கொள்ளும் வழக்கம் வந்தது. இப்படி செய்வதால், எல்லா புண்ணியங்களும் கிடைக்கும் என்பதால் , இதற்கு,கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது.
கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு தீரா நோயும், நரக பயமும்,அகால மரணமும் ஏற்படாது என்பது சாஸ்திர உண்மை.
எனவே, தீபாவளி திருநாளில் கங்கா ஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டு ,புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி, இனிப்பு உண்டு,வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.