தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சாலைகள் முழுவதும் குவிந்து கிடக்கும் பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
சென்னையில் காலையும், மாலையில் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடினர். பண்டிகை முடிந்த நிலையில், சாலைகளில் பட்டாசு கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பட்டாசு கழிவுகள் தேங்கியுள்ளன.
மதுரையில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில், சாலை முழுவதும் குப்பைகள் நிறைந்து காட்சியளித்தன. இரவில் பெய்த மழை காரணமாக மழைநீரோடு பட்டாசு குப்பைகள் கலந்ததால் அவற்றை அகற்றுவதில் தூய்மை பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். உணவு பொருட்களும் ஆங்காங்கே சாலையில் வீசப்பட்டுள்ளால் மழைநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளதால் விழாக்காலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்கள் வெடித்த பட்டாசு கழிவுகள், வியாபாரிகளால் போடப்பட்ட குப்பைகள் என சுமார் 100 டன் அளவிலான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட 4 வீதிகளிலும் அதிகப்படியான குப்பைகள் குவிந்து காட்சியளிக்கின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.