மதுரையில் தீபாவளியையொட்டி திறக்கப்பட்ட மதுக்கடைகளால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மதுப்பிரியர்கள் சாலை விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருது பாண்டியர்கள் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார்.
இதனால் 3 நாட்களாக மதுவிற்பனை செய்யப்படாத நிலையில் தீபாவளியையொட்டி நேற்று மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் திரண்ட மதுப்பிரியர்கள், மதுவை வாங்கி சென்றனர். இந்த நிலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய பலர் பல்வேறு இடங்களில் சாலை விபத்தில் சிக்கினர்.
5 மணி நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை விபத்துகள் நிகழ்ந்ததால் 108 ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தன. விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட பலருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.