நீலகிரி மாவட்டம் உதகையில் சாரல் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக பிங்கர் போஸ்ட், காந்தல், கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும், பனி மூட்டம் காரணமாக வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேகமலை மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஆயிரத்து 640 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.