கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கனடா அரசியலில் என்ன நடக்கிறது ? ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலில் இருந்து தப்பிப்பாரா ? அல்லது ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா ? என்பது பற்றி பார்க்கலாம்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்குப் பிறகு, 2015 ஆம் ஆண்டு கனடாவில் லிபரல் கட்சி ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் ஆட்சிக்கு வந்தது. தனது தந்தை கனடா முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் அரசியல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவை வம்புக்கு இழுத்து, தனது அரசியல் வாழ்வில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பலமான எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களில், 153 இடங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதனால், எந்த ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் ஜஸ்டின் மற்ற கட்சிகளே நம்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் இடைத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியடைந்தது.
இந்த தோல்வியால் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமை கேள்வி குறியாகி இருக்கிறது
இடைத்தேர்தல்களில் தோல்வி மற்றும் அடுத்த அக்டோபருக்கு முன் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற நிலையில், சிறுபான்மை ஆட்சி நடத்தும் லிபரல் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
முதியவர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு உயர்த்தாவிட்டால், லிபரல்களை வீழ்த்தி தேர்தலை கட்டாயப்படுத்த கன்சர்வேடிவ்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் (NDP) இணைந்து செயல்படும் என்று எதிர்க்கட்சியான Bloc Québécois இன் தலைவர் கூறி இருந்தார்.
ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சி தயாராக இருக்கும் நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சொந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லிபரல் கட்சியில் உள்ள அதிருப்தி நாடளுமன்ற உறுப்பினர்கள், கடந்த அக்டோபர் 28ம் தேதிக்குள் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ட்ரூடோவுக்கு காலக்கெடு விதித்தனர்.
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதுதான், அவருக்கும் கட்சிக்கும் நல்லது என்ற லிபரல் கட்சியில் கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த தேர்தலிலும் தாமே பிரதமர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில், 60 சதவீத கனடா மக்கள், கன்சர்வேடிவ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 23 சதவீத மக்கள் ஆதரவே உள்ளது.