ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர் மாவட்டத்தின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டைய நடத்திய பாதுகாப்புப்படையினர், பங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் எனப்படும் சோட்டா வலீத் கொல்லப்பட்டார்.
அதேபோல், அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில், மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 4 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் பிடிபடும் பயங்கரவாதிகளை கொலை செய்யக்கூடாது என, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பயங்கரவாதிகளை உயிருடன் பிடித்து விசாரித்தால், தாக்குதல்களுக்கு யார் மூளையாக செயல்பட்டார்கள் என்பதை கண்டறிய முடியும் எனவும், ஜம்மு-காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசை சீர்குலைக்கும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.