கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாகர்கோவில், சுசீந்திரம், ஆசாரிப்பள்ளம், தக்கலை, மார்த்தாண்டம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால், பல இடங்களில் சாலைகளில் நீர்தேங்கி குளம்போல் காட்சியளித்தது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேபோல் பகவதி அம்மன் கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
மார்த்தாண்டம் பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அப்போது, மேம்பாலத்தில் இருந்து அருவி போல் நீர் கொட்டியதால், கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
கந்நாலி பாலம் அருகே உள்ள விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் சாலையின் குறுக்கே பாய்ந்து சென்றது. இதற்கிடையே குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.