கந்த சஷ்டி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களில் 2வது நாளாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 2-ஆம் நாளை ஒட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தேறின.
இதனையடுத்து சாமி ஜெயந்திநாதர், யாகசால மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை மனமுருக வழிபட்டனர்.
இதேபோல, வடபழனி முருகன் கோயிலிலும், கந்த சஷ்டி விழாவையொட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள் குவிந்தனர். குழந்தை வரம் வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், இல்லத்தில் மகிழ்ச்சி நிலைக்கு வேண்டியும் முருகனை மனமுருக வழிபட்டனர்.
காலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.