இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில், இஸ்ரேலின் திரா நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவை லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் பெரும்பாலானவை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், திரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கிய ஏவுகணையால் 11 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.