உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்துக்கு, 2.5 டெசில்லியன் டாலரை அபராதமாக ரஷ்ய நீதிமன்றம் விதித்துள்ளது. இது உலக அளவில் இதுவரை விதிக்கப்பட்ட அதிக பட்ச அபராதங்களில் ஒன்றாகும். சொல்லப் போனால், ஒட்டுமொத்த உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட இந்த அபராத தொகை அதிகம் என கூறப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக இருக்கின்றன.
ஏற்கெனவே ரஷ்யாவுடன் பனிப் போரில் இருக்கும் அமெரிக்கா, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் காரணமாக வைத்து , ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக, கூகுளுக்குச் சொந்தமான YouTube நிறுவனம், Tsargrad TV, RIA FANNTV, Russia 24, RT மற்றும் Sputnik போன்ற ரஷ்ய அரசு ஊடக சேனல்களின் யூடியூப் கணக்குகளை முடக்கியது. தொடர்ந்து, 17 ரஷ்ய ஊடகங்களின் யூடியூப் கணக்குகளைக் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet தடை செய்தது.
கூகுளின் வர்த்தக விதி மீறல்கள் காரணமாக இந்த சேனல்கள் முடக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரித் தடை செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம், தடை செய்யப்பட்ட ரஷ்ய ஊடகங்களின் யூடியூப் கணக்குகளின் தடையை நீக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும், யூடியூப் சேனல்களைத் தடை செய்வதன் மூலம் நாட்டின் நிர்வாகக் குற்றச்சட்டத்தை மீறியதற்காக ரஷ்யாவுக்கு கூகுள் அபராதம் கட்ட உத்தரவிட்டது.
இந்த அபராதத்தைக் கட்டாத பட்சத்தில், ஒரு நாளைக்கு 100,000 ரூபிள் கட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
கூகுள் அபராதம் கட்டாததால், கூகுள் கட்ட வேண்டிய அபராத தொகை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றது. இந்தத் தடை ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை அபராதத் தொகையை கூட்டி பார்க்கும்போது, டெசில்லியனை எட்டியுள்ளது.
2.5 டெசில்லியன் என்பது 2.5 டிரில்லியன் டிரில்லியன் டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த தொகை என்பது உலக நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானதாகும். உலகின் ஒட்டு மொத்த ஜிடிபி சுமார் 110 லட்சம் கோடி ஆகும். இந்நிலையில்,உலகத்தில் உள்ள அத்தனை பணத்தைச் சேர்த்தாலும், இந்த அபராதத் தொகையைக் கட்ட முடியாது.
கூகுள் நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகை இரட்டிப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்தும் வரை ரஷ்யாவுக்குள் கூகுளின் பயன்பாடு தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நீதிமன்றத்தின் அபராத உத்தரவு குறித்து, கூகுள் நிறுவனம், இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை. 2.24 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடைய கூகுளுக்கு இந்த அபராத தொகை அசா த்தியமானதாகும்.
முன்னதாக 2022ம் ஆண்டில், கூகுளின் ரஷ்ய துணை நிறுவனமான Google LLC, திவாலானதாக அறிவிக்க கோரி ரஷ்ய அரசிடம் விண்ணப்பித்தது. அந்த ஆண்டில், கூகுளின் ரஷ்ய நிறுவனத்தின் கடன் நிலுவை சுமார் 19 பில்லியன் ரூபிள்களைத் தாண்டியது. இதனால்,கூகுள் ரஷ்ய நீதிமன்றம் விதித்த அபராதத்தைக் கட்டாமல் தட்டி கழித்தது.