ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே நூற்றாண்டு பெருமை கொண்ட பாம்பன் ரயில் பாலத்தில், அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை மற்றும் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் ஆகியவை காரணமாக பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் புதிய ரயில் பாலம் வழியாக சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
புதிய பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், புதிய ரயில் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.