சென்னை மெரினாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஜோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த, காரினை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் எடுக்குமாறு கூறியபோது, காரின் உரிமையாளர் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகிய இருவரும் காவலரை தரக்குறைவாக பேசினர்.
இதையடுத்து, இருவரையும் 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.