திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை நடைபெற்றது.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரண்டாவது முறையாக வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான 6 மாணவிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை மூட வலியுறுத்தி அதன் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடம் வந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பள்ளியை தற்காலிகமாக மூடவும் அறிவுறுத்தினர்.
அதனடிப்படையில் பள்ளி மூடப்பட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு கருவிகளை பயன்படுத்தி சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த சோதனைக்குப் பின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.