அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்றாலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் தேதியும், அதிபர் பதவியேற்கும் தேதியும் அரசியலைமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவும், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வும் நடைபெறும்.
தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மாறாக மக்கள் அளிக்கும் வாக்கு மாநில அளவில் மட்டுமே கணக்கிடப்படும்.
மக்கள் வாக்கு அடிப்படையில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தான் அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள் அமெரிக்காவின் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர் வாக்குகள் உள்ளன.
அதன்படி நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எலக்டோரல் காலேஜும் கொண்டிருக்கும் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அந்த மாநிலத்தில் உள்ள எலக்டோரல் காலேஜின் அனைத்து வாக்குகளையும் எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய விதியும் உள்ளது.
அதனால் தான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகளவு பெற்றிருந்தாலும் எலக்டோரல் காலேஜ் வாக்குகுளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியை தழுவினார்.
எனவே மாநில அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்குத் ஆதரவாக இருந்தாலும் டெக்ஸாஸ், புளோரிடா, ஜார்ஜியா, அரிஜோனா, விஸ்கான்சிங் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள எலக்டோரல் காலேஜ் வாக்குகளே அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றன.
ஒருவேளை எலக்டோரல் காலேஜ் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக பெறும் பட்சத்தில் மேலவை உறுப்பினர்களான செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.