குடியாத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், போலீசாரே மணல் கடத்த கூறிவிட்டு தற்போது அவர்களே கைதும் செய்வதாக கைதானவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்ப்பட்டி பகுதியில், டிராக்டர் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக எஸ்.பி-யின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்தது.
அதில், காவலர்கள் இருவர் வெங்கடேசனை கீழே தள்ளி கால்களை கட்டியவாறு பிடித்திருப்பது போலவும், வெங்கடேசன் கூச்சலிட்டு அலறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், போலீசார்தான் வெங்கடேசனிடம் மணல் கடத்தலில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும், தற்போது அவர்களே அவரை கைது செய்துள்ளதாகவும் வெங்கடேசனின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்நிலையில், அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், ரகசிய தகவலின் அடிப்படையில்தான் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.