விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின்போது கார்க் பந்து தாக்கி லோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரிக்கெட் போட்டிகளில் கார்க் பந்தை பயன்படுத்த தடையில்லை என்பதாலும், இளைஞர் உயிரிழந்ததில் போட்டி ஏற்பட்டாளர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதாலும் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், மரணமடைந்த இளைஞர் லோகநாதனின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு அறிவுரை வழங்கினார்.