இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பெங்களூரு, வரலாறு காணாத கடும் மழை, வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை முதல் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பெரும் போக்குவரத்து நெரிசல் வரை பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதனால், IT நகர் அந்தஸ்தை பெங்களூரு சமாளிக்குமா? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
பெங்களூரு நீண்ட காலமாகவே இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. சுமார் 24,500 கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடைய தொழில்நுட்பத் துறையை தன்னகத்தே பெங்களூரு வைத்திருந்தது. எனவே தான் பெங்களூரு நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், இந்த அந்தஸ்தை இழக்கும் நிலைமைக்கு இப்போது பெங்களூரு வந்துள்ளது. பெங்களூருக்குப் போட்டியாக ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையங்களாக உருவெடுத்துள்ளன.
தண்ணீர் பற்றாக்குறை,எதிர்பாராத கடும் மழை மற்றும் வெள்ளம், உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் கட்டுக்கடங்காத வாழ்க்கைச் செலவுகள் உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகளை பெங்களூரு சந்தித்து வருகிறது.
பெங்களூருவில் 14,781 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில், 6,997 ஆழ்துளை கிணறுகளில் கிட்டத்தட்ட பாதி வறண்டுவிட்டது. 1973ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள நீர் பரப்பில் சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. பெங்களூருவின் 98 சதவீத ஏரிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றுப்படுகை நீர்த்தேக்கங்களில் 39 சதவீத கொள்ளளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், குடிநீர் மற்றும் பாசன நீர் வழங்கும் இந்த நீர்த்தேக்கங்களில், சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளதால், பெங்களூரில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூரு தவிக்கிறது என்றால், இன்னொருபுறம் அதிகமான மழையினால் பெங்களூரு தத்தளிக்கிறது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மட்டும் 27 ஆண்டுகளுக்கு பிறகு , 186 மில்லிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்து நகரத்தைப் புரட்டி போட்டது. சொல்லப்போனால் பெங்களூரின் பலவீனமான உள்கட்டமைப்பை, கனமழை வெளிப்படுத்தியுள்ளது. அதனால், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பெங்களூருவில், பள்ளமான சாலைகள், தண்ணீர் தேங்கிய தெருக்கள் மற்றும் உடைந்த கழிவுநீர் பாதைகள் ஆகியவை மோசமான நகர்ப்புற திட்டமிடலுக்கான அடையாளங்களாக உள்ளன.
பெங்களூருவில் 79 தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் 3,500 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்கள் அலுவலகத்துக்கு வந்து பணிசெய்ய ஊழியர்களைக் கேட்டு கொண்டுள்ளன.
தொழில்நுட்ப மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு வாடகைகள் கூடியுள்ளன. உதாரணமாக, 2 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான சராசரி வாடகை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 21,000 ரூபாயில் இருந்து 35,000 ருபாயாக உயர்ந்திருக்கிறது. வாடகைச் செலவுகள் கூடுவதால், தொழில்நுட்ப மையத்திலிருந்து வெகுதூரம் தள்ளி குடியேறுகிறார்கள் ஊழியர்கள்.
இதன் காரணமாக பெங்களூருவின் அதிக போக்குவரத்து நெரிசல், குறுகிய பயணங்களை நீண்ட நேர பயணங்களாக மாற்றுகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு,உலகளவில் அதிக நெரிசல் உள்ள நகரங்களில் இரண்டாவது இடத்தில் பெங்களூரு இருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், அகமதாபாத், ஜெய்ப்பூர், மைசூர் மற்றும் நாக்பூர் போன்ற நகரங்கள், உள்கட்டமைப்பு,குடியிருப்பு வசதிகள் போன்றவற்றில்,சிறந்து விளங்குகின்றன.மேலும்,வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இந்த நகரங்கள் முதல் தேர்வாக உள்ளன.
பெங்களூருவின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் நீடித்தால், இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப மையம் என்ற அந்தஸ்தை பெங்களூரு விரைவில் இழக்க நேரிடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெருமையை பெங்களூரு தக்க வைக்குமா ? என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.