வழக்கு விசாரணைக்கு வரும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான அண்ணாமலையுடன் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்றனர்.
இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகக்கூறி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
விஐபி-கள் ஆஜராகும்போது, அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழக்கறிஞர்கள் வர வேண்டும் என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என்று கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.