இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலான்டை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி நீக்கம் செய்துள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் இடம்பெற்றபோதும் இருவருக்கும் இடையே காஸா போர் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து யோவாவ் கலான்டை நீக்கி
பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெதன்யாகு, காஸா போர் தொடங்கிய காலத்தில் கலான்ட் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளுக்கு உடன்படாமல் கலான்ட் எதிர்க்கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் நெதன்யாகு கூறியுள்ளார். பிரச்சனையை தான் சரிசெய்ய முயன்றபோதும் பலனளிக்காததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.