மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில கடனுதவி வழங்கும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ், நாடு முழுவதும் 860 கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள், வெளிப்படைத் தன்மையுடனும், எளிமையான முறையிலும் கடனுதவி பெற வழிவகை செய்யும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் 2024 முதல் 2031ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 7 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம் என்றும், P.M.வித்யாலட்சுமி இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.