தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் இலவசமாக வீடு கட்டி தரப்பட்டது. இது குறித்து சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்…
கடந்தாண்டு இறுதியில் தென்மாட்டங்களில் பெய்த கனமழையின் கோர காட்சிகள் இவை. வரலாறு காணாத இந்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்தன.
அப்போது, தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நின்றனர். பல்வேறு பகுதியில் அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்புபணியின்போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் உடைமைகளை இழந்த பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் தேவை என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர், கனமழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிதாக வீடு கட்டி தர முன்வந்தனர்.
அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
மாசானமுத்து ஐபிஎஸ் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, RSS சேவா துறையின் தேசிய இணை செயலாளர் A.செந்தில்குமார், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல் இயக்குநர் சீனிவாசன் மற்றும் பத்மகுமார், ஹரி கிருஷ்ணகுமார், வன்னிய ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பயனாளிகள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சாவியும், பாரதமாதா மற்றும் திருச்செந்தூர் முருகனின் புகைப்படங்களும் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, காலநிலை மாற்றத்தால்தான் வரலாறு காணாத மழை பெய்ததாக கூறினார். மேலும், பொருளாதார வளர்ச்சியை போலவே சுற்றுசூல் பாதுகாப்பும் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த பயனாளர்கள், தங்களுக்கு வீடு வழங்கிய தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர். மழைவெள்ள பாதிப்பின்போது தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் துணை நின்றதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்க தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பினர் மக்கள் சேவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.