கந்த சஷ்டி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பரமசிவன், பார்வதி, விநாயகர் உள்ளிட்ட வேடமணிந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் கண்ணை கவரும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.
வடபழனி முருகன் கோயிலில் நடந்தேறிய சூரசம்ஹார நிகழ்வை காண திரளான பக்தர்கள் குவிந்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் மேள தாளங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க சூரனை வதன் செய்தார். இதை கண்டு உடல் சிலிர்த்த பக்தர்கள் முருகா முருகா, அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் இந்நிகழ்வை கண்டு சென்றனர்.
மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து முருகப்பெருமானின் வேல்வாங்கும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி வேல் கொண்டு சுவாமி, சூரபத்மனை வதம் செய்தார். அப்போது பக்தர்கள் அரோஹரா கோஷங்கள் எழுப்பினர்.
நாகர்கோவில் பாலமுருகன் கோயில், மருங்க்ஷர் சுப்பிரமணிய சாமி கோயில், தோவாளை முருகன் கோயில்களில் சூரம்சம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. பால முருகன் சன்னிதானத்தில் இருந்து வெள்ளி குதிரையில் புறப்பட்ட சுவாமி அசுரனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள முத்து மலை முருகன் கோயிலில். மூன்றாம் ஆண்டு சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு வேல் பூஜை நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி சூரனை வீழ்த்தினார். இதேபோல அம்மாபேட்டை, ஊத்துமலை, சித்ராசாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் போர் களத்திற்கு அழைத்து வரப்பட்ட சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை அழித்தார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு மஹா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.