“கிழக்கின் முத்து” என்று அழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த சில ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. கோவாவின் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு சரிய கோவாவின் டாக்ஸி மாஃபியா தான் காரணம் என்று சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கோவாவின் டாக்ஸி டாக்ஸி மாஃபியா பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இளைஞர்களின் கனவு சுற்றுலா தலமாக கோவா திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகோடு திகழும் கோவா, வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள், பனைகள் தாலாட்டும் கடற்கரைகள், அழகிய தென்னந்தோப்புகள், உற்சாகம் தரும் படகு சவாரிகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதாகும். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல், இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோவிட் தொற்று காலத்துக்கு முன் ஆண்டுதோறும் 9 லட்சத்து 37,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு, 4 லட்சத்து 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கோவாவுக்கு வந்துள்ளனர். இருப்பினும் உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதாக கோவா மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோவா சுற்றுலாத் துறையின் வீழ்ச்சிக்கு ‘கோவா டாக்ஸி மாஃபியா’ தான் காரணம் என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
2018ம் ஆண்டில், 2000 ரூபாய் கட்டணத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு விமானத்தில் வந்ததாகவும், கோவா விமான நிலையத்திலிருந்து அரம்போலுக்குச் செல்ல டாக்ஸிக்கு 2500 ரூபாய் செலவழித்ததாகவும், டாக்ஸி மாஃபியா கும்பல் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளிடையே அவநம்பிக்கையையும் வெறுப்பையும் தூண்டும், இது போன்ற சம்பவங்கள், நாளாக நாளாக அதிகரித்துள்ளது.
கோவா டாக்ஸி மாஃபியா. ஒழுங்கு படுத்தப்படாத, உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர் குழுவாகும். மாநிலம் முழுவதும் உள்ள டாக்ஸிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளது இந்த டாக்ஸி மாஃபியா. இந்த டாக்ஸி மாஃபியாவால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சிறிய மாநிலமான கோவாவில், சாலைகள் மிகவும் குறுகலானவை. மாநிலத்தில் உள்ள வாகனங்களை நிறுத்தவதற்கு கூட கோவாவில் இடமில்லை. சொல்லப்போனால், கோவாவில் மெட்ரோவைத் தவிர திருப்திகரமான பேருந்து சேவை கூட இல்லை. பேருந்து சேவையும் இரவு 9 மணிக்குள் நிறுத்தப் படுகின்றன. மார்கோவைத் தவிர வேறு எந்த முக்கிய நகரங்களுக்கும் இரயில்வே போக்குவரத்து வசதி இல்லை. உள்ளுரில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்களில் மீட்டர் இல்லை.
மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் டாக்ஸி மாஃபியா கும்பல் மீட்டர் பொருத்த மறுத்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதைக் காட்டும் தடுக்கும் ஜிபிஎஸ் அமைப்புகளை நிறுவவும் அந்த கும்பல் மறுத்துவிட்டது.
உள்ளூர் டாக்சி தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பால் OLAமற்றும் UBER போன்ற செயலிகள் சேவை கோவாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
டாக்சி மாஃபியா மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்று ஒப்புக்கொண்ட கோவாவின் போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, டாக்சியில் மீட்டர் பொறுத்த மறுக்கும் டாக்சி ஓட்டுனர்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக கூறினார். மேலும் பெரும்பாலான டாக்ஸி ஓட்டுநர்களால், செலுத்தப்படாத டிடிஎஸ் மற்றும் ஜிஎஸ்டியால், அரசுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே, கடந்த சுற்றுலாப் பருவத்தில் கோவாவில் 150 சதவீத சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும், முக்கிய உலகளாவிய மையங்களுடன் வலுவான விமான இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை கோவா கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கோவாவின் முக்கிய சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வந்தாலும் சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மாநில அரசு ஆய்வு செய்து, டாக்சி மாஃபியாக்களின் ஏகபோகத்தை தகர்த்தால் மட்டுமே, கோவாவின் சுற்றுலா துறை வளரும் என்பது உண்மை.