மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கான பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், லட்கி பஹின் யோஜனா மூலம் பெண்களுக்கு மாதாந்திரம் 2,100 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 25 ஆயிரத்து 200 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படுவதுடன், அவர்களுக்கான குறைந்த பட்ச வருமான ஆதரவு நிதி 12,000 ரூபாயிலிருந்து 15,000 ஆக அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் 1,500 ருபாயில் இருந்து 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மற்றும் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
OBC, SEBC, EWS, NT, மற்றும் VINT வகை மாணவர்களுக்கான கல்வி மற்றும் தேர்வுக் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்துதல் அக்ஷய் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச ரேஷன்
எஸ்சி, எஸ்டி மற்றும் டிபிசி தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் வட்டியில்லா கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணங்களில் 30% குறைக்கப்படுவதுடன், சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் வீடுகளை ஒளிரச் செய்தல் ஆகியவையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.