நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் பீ.பீ. குளம் கண்மாயையொட்டி அமைந்துள்ள முல்லைநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடுகளை காலி செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அப்பகுதி மக்களுக்கு ராஜாக்கூர் பகுதியில் மானிய விலையில் வீடுகளை வழங்க அரசு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்தரப்பினர் ராஜாக்கூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் சில மாதங்களிலேயே இடியும் நிலையில்தான் உள்ளது என தெரிவித்ததுடன் ராஜாக்கூர் பகுதியில் உள்ள கட்டடத்தின் நிலை குறித்து அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.