தகுதி பெற்றவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க முடியவில்லை என்றால் தேர்ச்சி பெற்ற அனைவரையும் கருணை கொலை செய்து விடுங்கள் என ஆசிரியர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்து 200 பணியிடங்களை மட்டுமே தற்போது தமிழக அரசு நிரப்ப நடவடிக்கை எடுத்திருப்பதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வாக்களித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் அரசு நிரப்பவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக்கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் கடிதங்களையும், மின்னஞ்சலையும் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.