ஆர்மீனியாவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சரை, தனது ராணுவத்தில் சேர்க்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
சிவபெருமானின் வில்லின் பெயரால் அழைக்கப்படும் பினாகா ராக்கெட் லாஞ்சர், இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முக்கியப் பிரிவான ARDE எனப்படும் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ரஷ்ய ராக்கெட் ஏவுதல் ஆயுத அமைப்புக்கு மாற்றாக இந்தியாவால் தயாரிக்கப்பட்டது தான் பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் ஆகும்.
1980களின் தொடக்கத்தில் இந்த பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் நாட்டுக்காக அர்ப்பணிக்க பட்டது. முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. எதிரிகளின் நிலைகளை துல்லியமாக குறிவைத்து தாக்கி தனது திறன்களை வெளிப்படுத்தியது பினாகா ஆயுத அமைப்பு. பல்வேறு ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, இப்போது, மேம்படுத்தப்பட்ட திறன்களுடன், நவீனமயமாக இந்த பினாகா உருவாக்கப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்கு ஹிமார்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியது, அதே ஆண்டு ஜூலை மாத இறுதியில், உக்ரைன் படைகள் ரஷ்ய இராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்பட்டன. இந்த சூழலில், அமெரிக்காவின் ஹிமார்ஸைத் தாண்டி இந்தியாவின் பினாகாவின் செயல் திறன் ரஷ்ய உக்ரைன் போரில் வெளிப்பட்டது.
சர்வதேச அளவில்,அமெரிக்காவின் ஹிமார்ஸை விட மேம்பட்ட திறன்களுடன் பினாகாவை இந்தியா உருவாக்கி உள்ளதாக பாராட்டப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால், பினாகா ஆயுத அமைப்பு ஒரு மல்டி-பேரல் ராக்கெட் அமைப்பு ஆகும். இது வெறும் 44 வினாடிகளில் 12 ராக்கெட்டுகளை அதிவேகமாக இலக்கை நோக்கி செலுத்தும்.
பினாகாவின் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை மார்க் I எனப் படும். இது சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியதாகும். மார்க்-II என்பது இரண்டாவது வகை பினாகா ஆயுத அமைப்பாகும். இது, சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதுங்கு குழிகள் மற்றும் எதிரிகளின் முகாம்களை ஒரு சில நொடிகளிலேயே துல்லியமாக சென்று தாக்கும் திறன் உடையதாகும். பினாகாவின் திறன்களை 300 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய வகையில் மேம்படுத்த வெற்றிகரமான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
பினாகா ஆயுத அமைப்பின் ஒரு பேட்டரி, ஆறு ஏவுகணைகள், லோடர் அமைப்புகள், ரேடார் மற்றும் நெட்வொர்க் அடிப்படையிலான நவீன இணைப்புகள் மற்றும் CONTROL PANEL ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
Mach 4.7 என்ற வகை பினாகா ஆயுத அமைப்பு, மணிக்கு 5,800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். எனவே, இதனை, இடைமறித்து அழிப்பது மிக கடினமாகவும் இருக்கும். பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் ராக்கெட்டுக்களை பினாகா மூலம் செலுத்த முடியும்.
Tatra truck-கில் ஏற்றுக் கொன்டு போகக் கூடிய வசதியுள்ள பினாகா, தரைப்படை இராணுவத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய இராணுவம் நான்கு பினாகா படைப்பிரிவுகளை வைத்திருக்கிறது. சமீபத்தில், சீனாவுடனான எல்லை பதற்றங்களின் போது, லடாக் எல்லை பகுதியில் பினாகா தான் நிறுத்தப் பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, உலகளாவிய இராணுவத் தளவாட ஏற்றுமதி சந்தையில், இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட பினாகாவை வாங்க 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்மீனியா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் , உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட பினாகாவின் முதல் இறக்குமதியாளர் என்ற பெருமையை ஆர்மேனியா பெற்றது. ஆர்மீனியா பினாகாவின் முதல் வாடிக்கையாளராக மாறியதில் இருந்து, மற்ற உலக நாடுகள் பினாகாவை வாங்குவதில் ஆர்வம் காட்ட த் தொடங்கியுள்ளன.
பினாகாவுடன் ஒப்பிடக்கூடிய ராக்கெட் அமைப்பு இல்லாத பிரெஞ்சு இராணுவம்,தற்போது பினாகா ஆயுத அமைப்பை இந்தியாவிடமிருந்து வாங்க முன் வந்துள்ளது. பிரான்ஸ் இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் ரிச்சோ, இந்தியாவின் பினாகா ஆயுத அமைப்பை பிரெஞ்சு இராணுவம் தீவிரமாக மதிப்பீடு செய்து வருவதாகவும், விரைவில் பினாகா ஆயுத அமைப்பை வாங்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய இராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் இராணுவ உயர் அதிகாரிகள் 20வது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைக்காக சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இருதரப்பு பரஸ்பர இராணுவ மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்துள்ளனர். இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நீண்ட காலமாகவே வலுவானதாக இராணுவ உறவு இருந்து வருகிறது.
ஏற்கெனவே பிரான்ஸ் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற மேம்பட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
அண்மையில்,பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனத்துக்கும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே ஹெலிகாப்டர் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பினாகாவை வாங்கும் முயற்சியில் பிரான்ஸ் முன்னேறினால், அது இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும்.