விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பெண்கள் படைப்பிரிவு ஏற்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.எப். எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை கடந்த 1969-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முக்கியமான அரசு மற்றும் தொழிற்சாலை கட்டடங்களின் பாதுகாப்புக்கு இந்த படை பொறுப்பேற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில், அனைத்து பெண்கள் படைப்பிரிவு ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இத்தகைய பெண்கள் படை உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மேம்பட்ட படையாக உருவாக்கப்படும் பெண்கள் படை, தேசத்தின் முக்கிய கட்டமைப்புகளான விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும் என பதிவிட்டுள்ளார். இந்த பெண்கள் படை மிக முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்களாகவும் பாதுகாப்பு அளிக்கும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், நாட்டை பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பில் இன்னும் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்த முடிவு நிச்சயம் நிறைவேற்றும் எனவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.