ராஜஸ்தான் இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியை சுயேட்சை வேட்பாளர் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து நள்ளிரவில் வன்முறை வெடித்து கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம், டியோலி உனியரா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நரேஷ் மீனா என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அத்தொகுதிக்குட்பட்ட சம்ரவாடா கிராமத்தில் அமித் சௌத்ரி என்ற அதிகாரி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த சுயேட்சை வேட்பாளர் நரேஷ் மீனாவுக்கு, தேர்தல் அதிகாரி அமித் சௌத்ரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தேர்தல் அதிகாரியை நரேஷ் மீனா சரமாரியாக கன்னத்தில் தாக்கியதால் அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.
இது தொடர்பாக சம்ரவாடா கிராமத்தில் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனாவும், அவரது ஆதரவாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை வெடித்ததில் பல்வேறு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ஆளும்கட்சிக்கு ஆதராக போலீசார் செயல்பட்டதால் வன்முறை வெடித்ததாக நரேஷ் மீனா தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 60 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.