கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயில் மற்றும் பழமைவாய்ந்த மங்காடு பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகளை திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி, கோயிலைத் திறக்க பூசாரி சென்றபோது, உள்பக்க பிராகார கதவு உடைக்கப்பட்டு மூலவர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர கிருஷ்ண பகவானின் ஐம்பொன் சிலையையும், வெள்ளி அங்கிகளையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல மங்காடு அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பால தண்டாயுதபாணி முருகன் கோயிலிலும் ஒன்றரை அடி உயரம் கொண்ட 25 கிலோ ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.