கரூர் அருகே பேப்பர் லோடு ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
காக்காவாடி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்தின் காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.