கார்த்திகை மாத பிறப்பையொட்டி தேனியில் உள்ள சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியானது, புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி அருவியில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு வருகைதந்த பக்தர்கள், புனித நீராடிவிட்டு பின்னர் சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்றனர்.
அங்கு குருக்கள் வாயிலாக மாலை அணிந்துகொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.