பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும், இது மதத்தால் உருவாகவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விளக்கவில்லை என தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்து அது முற்றிலுமாக வேறுபட்டது என குறிப்பிட்டார். மேலும், பாரதத்தில் மதம் கிடையாது எனவும், பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐரோப்பியர்கள் மூலமே நம் நாடு இந்தியா என அழைக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்லா மொழி இந்திய இலக்கியங்களும் ஒற்றுமையையே வலியுறுத்துவதாக கூறினார்.
குறிப்பாக, இந்திய இலங்கியங்களில் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்பது காட்டப்பட்டுள்ளதாகவும், ‘செப்புமொழி பதினெட்டு உடையாள்’ என நாட்டின் ஒற்றுமையை பாரதி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.