சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
தாராபுரத்தில் பிறந்த டி.கிருஷ்ணகுமார் 1987ஆம் ஆண்டு முதல் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கிருஷ்ணகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 2016 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தார். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கிருஷ்ணகுமார் பதவி வகித்தார்.
இந்நிலையில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிரிதுள் நவம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், நீதிபதி கிருஷ்ண குமாரை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கிருஷ்ணகுமார் இடம் மாற்றம் செய்யப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியிடங்கள் 9 ஆக உயரும் என கூறப்படுகிறது.